Home / Tamil / Tamil Bible / Web / Matthew

 

Matthew, Chapter 3

  
1. அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:
  
2. மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான்.
  
3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
  
4. இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.
  
5. அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,
  
6. தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
  
7. பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
  
8. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
  
9. ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  
10. இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாதமரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
  
11. மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
  
12. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
  
13. அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
  
14. யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
  
15. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
  
16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
  
17. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.