Home / Tamil / Tamil Bible / Web / Micah

 

Micah, Chapter 6

  
1. கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது.
  
2. பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.
  
3. என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்? எனக்கு எதிரே உத்தரவு சொல்.
  
4. நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்தஉன்னை மீட்டுக்கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.
  
5. என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
  
6. என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக் கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ?
  
7. ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற்பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?
  
8. மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயமஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
  
9. கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.
  
10. துன்மார்க்கனுடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ?
  
11. கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?
  
12. அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது.
  
13. ஆகையால் நான் உன் பாவங்களினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னைப் பலட்சயமாக்குவேன்.
  
14. நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம் பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.
  
15. நீ விதைத்தும் அறுக்காமற் போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையாடினபோதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை.
  
16. நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள்.