Home / Tamil / Tamil Bible / Web / Psalms

 

Psalms, Chapter 74

  
1. தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
  
2. நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.
  
3. நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.
  
4. உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
  
5. கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்.
  
6. இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப் போடுகிறார்கள்.
  
7. உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்.
  
8. அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.
  
9. எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
  
10. தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
  
11. உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
  
12. பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
  
13. தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
  
14. தேவரீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
  
15. ஊற்றையும் ஆற்றையும் பிளந்து விட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.
  
16. பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
  
17. பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டப்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.
  
18. கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
  
19. உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்.
  
20. உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே.
  
21. துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்.
  
22. தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
  
23. உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது.