|
Titus, Chapter 1
1. தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது:
2. பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3. பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,
4. ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
5. நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கீரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
6. குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.
7. ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானபிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,
8. அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
9. ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
10. அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதைமயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
11. அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
12. கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,
14. விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
15. சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
16. அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்னுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
|
|
Text source: This text is in the public domain, downloaded from http://www.unboundbible.org, compiled by biblephone2008@gmail.com.
|
|
This project is based on delivering free-of-charge the Word of the Lord in all the world by using electronic means. If you want to contact us, you can do this by writing to the following e-mail: bible-study.xyz@hotmail.com |
|
|
SELECT VERSION
COMPARE WITH OTHER BIBLES
|
|